கர்நாடக தேர்தல் அப்டேட்… முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் ; ஆயத்தமான குமாரசாமி !

Author: Babu Lakshmanan
13 May 2023, 10:09 am

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயார் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு கடந்த 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும், ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

ஆரம்பத்தில் காங்கிரஸ், பாஜக மாறிமாறி முன்னிலை பெற்று வந்தாலும், தற்போது, அறுதிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை சற்று கடந்து, 118 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. பாஜக 80 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதேவேளையில், மதசார்பற்ற ஜனதா தளம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

பாஜக முதலமைச்சர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் மகன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்து வருகின்றனர். அதேவேளையில், பாஜகவில் இருந்து காங்கிரஸ் இணைந்து போட்டியிட்ட ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் மஜத தலைவர் குமாராசாமி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவே கூறி இருப்பதால், காங்கிரஸ், பாஜக கட்சிகளின் தலைவர்கள் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தற்போதே பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர் தேவேகவுடா, குமாரசாமியுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது.

முன்னதாக, மஜத கட்சியின் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம். 30 முதல் 32 தொகுதிகளில் மதசார்பற்ற ஜனதாதளம் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கூட்டணி குறித்து இதுவரை எந்த கட்சியும் எங்களை தொடர்புகொள்ளவில்லை.

தேர்தலில் இரு தேசிய கட்சிகளும் அமோக வெற்றிபெறும் என தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகள் தெரிவிக்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் ஒரு சின்ன கட்சி, எங்களுக்கு பெரும் முக்கியத்துவம் இல்ல. இன்னும் சில மணிநேரங்களில் முடிவுகள் தெரிந்துவிடும். நல்ல வளர்ச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?