கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பேத்தி தற்கொலை : விபரீத முடிவுக்கு என்ன காரணம்..? வெளியான பகீர் தகவல்
Author: Babu Lakshmanan28 January 2022, 5:57 pm
பெங்களூரூ : கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் பேத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில பாஜக தலைவருமான எடியூரப்பாவின் மூத்த மகள் பத்மாவதியின் மகள் சவுந்தர்யா (30). பயிற்சி மருத்துவரான இவருக்கு 6 மாத குழந்தை உள்ளது. இவரது கணவர் மீரஜும் மருத்துவராவார். இவர்கள் பெங்களூரூவில் உள்ள வசந்த்நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில், சவுந்தர்யாவின் வீட்டில் வேலை செய்யும் பெண் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவர் கணவர் மீரஜுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, அவர் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, சவுந்தர்யா மின் விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக இருந்தார்.
இதனால், அதிர்ந்து போன போலீசார், சவுந்தர்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது இறப்பு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் அரகா தியானேந்திரா கூறியதாவது:- சவுந்தர்யாவின் மரணத்தில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. பிரசவத்திற்கு பிறகு அவர் மனஅழுத்தத்துடன் காணப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எடியூரப்பா அடிக்கடி அவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்த மகிழ்ச்சிப்படுத்துவார். தனது பேத்தி மரணத்தால் எடியூரப்பா பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார், எனக் கூறினார்.