கர்நாடகாவின் கொப்பால் மாவட்டம், கனககிரி தாலுகாவில் உள்ள சமுதாய பவனில், மக்கள் குறை தீர் முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் நலின் அதுல் உட்பட அரசு உயர் அதிகாரிகள், பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். சில அடிப்படை வசதிகள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டன. சில பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் கூறினர்.
அக்கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது திடீரென்று சங்கப்பா என்ற வாலிபர், மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார். திடீரென, மைக்கை வாங்கிய சங்கப்பா, “நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன், நல்ல குடும்பத்தை சேர்ந்தவன், திருமணம் செய்து கொள்வதற்காக, கடந்த 10 ஆண்டுகளாக, எனக்கு பெண் தேடுகிறேன். ஆனால், ஒரு பெண் கூட கிடைக்கவில்லை, கிடைத்தாலும் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன். எனக்கு பெண் பார்த்து கொடுக்க நீங்க தான் உதவனும். அரசு சார்பில், விவசாய பிள்ளைகளின் திருமணத்துக்காக ஒரு சிறந்த திட்டம் வகுக்க வேண்டும். இதன் மூலம், என்னைப் போன்ற விவசாய பிள்ளைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்ற உதவ வேண்டும்” என பேசினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட ஆட்சியர் உட்பட உயர் அதிகாரிகள் அனைவரும் குபீரென்று சிரித்தனர். பின், அவரது கோரிக்கையை பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்து அனுப்பி வைத்தார்.