ரவா இட்லிக்கு டோக்கன்… மேஜைக்கு அடியில் வெடிகுண்டு பை ; திட்டமிட்ட சதி..? ஒருவர் கைது.. பகீர் சிசிடிவி காட்சி..!!
Author: Babu Lakshmanan2 March 2024, 8:37 am
கர்நாடகாவில் பிரபல உணவகத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் ராமேஸ்வரம் கஃபேவில் மர்மபொருள் வெடித்து விபத்தானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை விட இது வெடிகுண்டு விபத்துதான் என முதலமைச்சர் சித்தராமையா கூறியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியது, ஓட்டலுக்கு வந்த மர்மநபர் ஒருவர் வைத்து சென்ற பையில் வெடிகுண்டு வெடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. வெடி விபத்தில் காயமடைந்த 8 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா மற்றும் வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் பெங்களூருவின் எச்ஏஎல் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, ஓட்டலில் பையை வைத்து சென்றவர் 30 முதல் 35 வயது இருக்கக்கூடிய நபர் என்றும், ரவா இட்லிக்கான டோக்கனை வாங்கி விட்டு, அதனை வாங்கி சாப்பிடாமல் பையை மட்டும் விட்டுச் சென்றதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் யார் என்பது குறித்த விபரம் வெளியாகவில்லை. இந்த சம்பவம் கர்நாடகா மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.