அமைதியா இருங்க.. இல்லனா உங்க வீட்டுக்கு ED வந்துரும் : எதிர்க்கட்சிகளுக்கு மக்களவையில் மத்திய அமைச்சர் மிரட்டல்!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2023, 2:33 pm
டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) இரு தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா மீதான விவாதத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலுரை வழங்கிய பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி சர்வீசஸ் மசோதா மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேசியபோது, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.
அதைமீறி பேசிய அவர், அமைதியாக இருங்கள் அல்லது அமலாக்கத்துறை உங்கள் வீட்டிற்கு வரலாம் என்று கூறினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பேச்சு குறித்து விமர்சித்துள்ளனர்.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டுக்கான டெல்லி அவசரச் சட்ட மசோதாவை ஆதரித்து பேசிய லேகி, இது அதிகாரத்திற்கும், பொறுப்புகளுக்கும் இடையில் சமநிலையை கண்டறியும் நோக்கத்தை கொண்ட மசோதா தான் இது என விவரித்தார்.
மசோதாவைப் பற்றி பேசுவதற்கு முன்பு டெல்லி நிர்வாகத்தை விமர்சித்திருந்த லேகி, அரவிந்த் கெஜ்ரிவாலை தேசிய தலைநகரின் 1/4 வது முதல்வர் என்று குறிப்பிட்டார்.
சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசுக்கு ஏறக்குறைய பாதி அதிகாரம் இருக்கும் என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதால், நான் அவரை 1/4வது முதல்வர் என்று குறிப்பிட்டேன் என்றார்.