இரு பேருந்துகளுக்கு இடையே சிக்கி பைக்கில் சென்ற தம்பதி உயிரிழப்பு ; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
Author: Babu Lakshmanan16 October 2023, 6:19 pm
இரு பேருந்துகளுக்கு இடையே நசுங்கி பைக்கில் சென்ற தம்பதி உயிரிழப்பு ; பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!
கோழிக்கோட்டில் இரு தனியார் பேருந்துகளுக்கு இடையே சிக்கி தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் குறித்த பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வேங்கேரி என்னும் பகுதியில் தற்போது பைபாஸ் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வாகனங்கள் குறுகலான மாற்றுப்பாதை வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.
இன்று காலை ஒன்பதரை மணியளவில் அந்த குறுகலான சாலை வழியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது, அதில் தனியார் பேருந்து ஒன்றின் ஓட்டுனரின் கவனக்குறைவால் பேருந்தின் வேகம் திடீரென அதிகரித்துள்ளது. நேராக சென்று முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு தனியார் பேருந்தின் பின்பகுதியிலும் இடித்துள்ளது. இந்த இரு பேருந்துகளுக்கும் இடையே சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனங்களும் இந்த விபத்தில் சிக்கன.
இந்த விபத்தில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதியர்களான சைஜு, ஜீமா என்பவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயங்களுடன் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து குறித்து கோழிக்கோடு போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் மீது கவனக்குறைவாக பேருந்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். இதனிடையே அந்த விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.