கூட்டாட்சி தத்துவத்திற்காக கலைஞர் ஆற்றிய பணி இணையற்றது : கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் புகழஞ்சலி!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2022, 12:47 pm
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். கருணாநிதி நினைவு தினத்தையொட்டி சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.
பேரணியின் நிறைவில் முதலில் மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் கருணாநிதி நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டி கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டுவிட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “திராவிட அரசியலிலும், கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாப்பதிலும் கலைஞர் ஆற்றிய பங்களிப்புகள் இணையற்றது.
அவரது நினைவு நாளில் எனது புகழஞ்சலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். கலைஞரின் வாழ்வும் நினைவும் இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்க அனைவரையும் ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.