கொத்து கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட காட்டு பன்றிகள்… வைரலாகும் கேரள வனத்துறை வீடியோ ; அனுமதி கொடுக்குமா தமிழக அரசு…!!
Author: Babu Lakshmanan18 August 2023, 1:41 pm
கேரளாவில் விவசாயத்தை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டு வீழ்த்தி இறந்த பன்றிகளை எண்ணும் வீடியோ வைரலாகி உள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் அமைந்துள்ளது. வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானை காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் வாழை, சோளம், கரும்பு போன்ற பயிர்களை அடியோடு அழித்து வருவதால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கூட்டம் கூட்டமாக வந்து விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்வதற்கு அனுமதி கேட்டு விவசாயிகள் போராடி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் சுட்டுக் கொள்வதற்கு ஏராளமான நிபந்தனைகளுடன் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு முறையும் உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்ற பின்னரே, வனத்துறையினர் காட்டு பன்றிகளை சுட்டுக் கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டம் விவசாயிகளுக்கு பயனற்ற நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் விவசாயத்தை நாசப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்ள அந்தந்த பகுதி ஊராட்சி தலைவர்களே அனுமதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, விவசாயத்தை அழித்த 50க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகளை சுட்டு வீழ்த்தி அவைகளை வரிசையாக கிடத்தி, ஊர்மக்கள் முன்னிலையில் ஒரு நபர் தமிழில் எண்ணும் வீடியோ தற்பொழுது வைரலாகி உள்ளது.
இதே போல தமிழகத்திலும் விவசாயத்தை அழிக்கும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொள்வதற்கு விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.