2 மாதத்தில் 10 முறை கொலை முயற்சி… சிக்கிய முக்கிய ஆதாரங்கள்… காதலனுக்கு விஷம் கொடுத்து காதலி கொன்ற வழக்கில் அடுத்தடுத்து திருப்பம்..!!
Author: Babu Lakshmanan9 November 2022, 2:30 pm
காதலனுக்கு கசாயத்தில் விஷம் கொடுத்துக்கொன்ற வழக்கு விசாரணையில் பல்வேறு தடயங்களும், சாட்சியங்களும் எங்களுக்கு கிடைத்துள்ளதாக விசாரணை அதிகாரி ஜான்சன் தெரிவித்துள்ளார்.
தமிழக – கேரளா எல்லையான பாறசாலை பகுதியை சார்ந்த சரோன் ராஜ் கொலை வழக்கு சம்பவத்தில் கசாயத்திலும், ஜூஸிலும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டதோடு அதற்கு உடந்தையாக இருந்த கிரீஷ்மாவின் தாய் மற்றும் தாய் மாமா கைது செய்யப்பட்டார்.
இவர்கள் மூவரையும் கேரளா குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தாயையும், மாமாவையும் ஐந்து நாட்களும், கிரீஷ்மாவை ஏழு நாட்களும் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வந்தனர்.
கிரீஷ்மாவை கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில், அவரது வீட்டில் இருந்து கஷாயம் கலப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பாத்திரங்கள் மற்றும் விஷ பாட்டில்களும் போலீசாரால் கண்டெடுக்கப்பட்டது. அது போல திங்கட்கிழமை கிரீஷ்மாவும், சரோன் ராஜும் தாலி கட்டிக் கொண்ட திருவனந்தபுரம் அருகே உள்ள வெட்டுக்காடு பள்ளி மற்றும் வேலி கடற்கரை பகுதி போன்ற இடங்களில் நேரடியாக அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, இன்று அவர்கள் இருவரும் குமரி மாவட்டத்தில் சுற்றி திரிந்த பகுதிகளுக்கும் நேரடியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் சாரோன் ராஜ் படித்த கல்லூரி உட்பட ஜூஸ் சேலஞ்ச் நடத்திய குழித்துறை பழைய பாலம், திற்பரப்பு அருவி பகுதியில் உள்ள தனியார் விடுதியிலும் நேரடியாக அழைத்து வந்து விசாரணையும் நடத்தினர்.
தொடர்ந்து, இதுகுறித்து இந்த வழக்கை விசாரித்து வரும் விசாரணை அதிகாரி ஜான்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த வழக்கு குறித்து பல்வேறு பகுதிகளில் சென்று ஆய்வு நடத்தினோம். பல்வேறு ஆவணங்களும், சாட்சிகளும் எங்களுக்கு கிடைத்துள்ளது. கிரீஷ்மாவை போலீஸ் விசாரணை முடிந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளோம்.
கரிஷ்மாவின் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று தடயங்களை அழித்து விவகாரத்தை பொருத்தவரையில் இந்த வழக்கை தமிழகத்தைச் சேர்ந்த பழுக்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை,” எனக் கூறினர்.
இதனிடையே, காதலன் சரோன் ராஜை கடந்த 2 மாதத்தில் 10 முறை கொலை செய்ய திட்டமிட்டு முயற்சி மேற்கொண்டதாக கிரீஷ்மா பகீர் வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.