வீட்டுக்குள் புகுந்து இளம் பெண் மருத்துவர் கடத்தல் : பட்டப்பகலில் கும்பல் துணிகரம்… வாகனங்கள், பொருட்களை அடித்து அட்டூழியம்!!
Author: Udayachandran RadhaKrishnan9 December 2022, 7:46 pm
தெலுங்கானாவில் சுமார் நூறு பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சகட்டுமேனிக்கு தாக்குதல் நடத்தி பல் மருத்துவரை கடத்தி சென்று அட்டூழியம்.
தெலுங்கானா மாநிலம் அதிலாபாத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் தாமோதர் ரெட்டி. அவருடைய மகள் வைஷாலி.பல் மருத்துவரான வைசாலிக்கு சில நாட்களில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இன்று மாலை 100 பேர் கொண்ட அடியாள் கும்பலுடன் தாமோதர் ரெட்டி வீட்டுக்கு வந்த நவீன் ரெட்டி என்பவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்.
பின்னர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். தொடர்ந்து தாமோதர் ரெட்டி அவருடைய மனைவி மற்றும் வீட்டிலிருந்த குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரையும் சகட்டுமேனிக்கு தாக்கிய அந்த கும்பல் பல் மருத்துவரான வைசாலியை பலவந்தமாக காரில் ஏற்றி கடத்தி சென்றது.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் பற்றி வைசாலியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளை கைப்பற்றி நவீன் ரெட்டி மற்றும் கடத்தல் கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தங்கள் மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என்று வைசாலியின் பெற்றோர் போலிஸ் அதிகாரிகளின் காலில் விழுந்து கதறி அழுதனர்.