பிரசவத்தின் போது கர்ப்பிணி உயிரிழப்பு… கடிதம் எழுதிவிட்டு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் தற்கொலை… டிரெண்டாகும் #Justice_For_Dr_Archana!!

Author: Babu Lakshmanan
30 March 2022, 5:12 pm

பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த நிலையில், கடிதம் எழுதி வைத்து விட்டு சிகிச்சை அளித்த மருத்துவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் மகப்பேறு மருத்துவர் அர்ச்சனா ஷர்மா தனது கணவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகின்றார். அவர்களது மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக கர்ப்பிணி பெண் ஒருவர் நேற்று வந்தார். அவருக்கு மருத்துவர் அர்ச்சனா பிரசவம் பார்த்தார். அப்போது, கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட சில கோளாறுகளால், அந்தப் பெண் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்தது, பிரசவத்தின் போது கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர் அர்ச்சனா மீது போலீசார் லால்சோட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். இதனால், மருத்துவர் அர்ச்சனா மனமுடைந்து போனதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், போலீசார் தன் மீது வழக்குப்பதிவு செய்ததால் மன அழுத்தத்திற்கு உள்ளான மருத்துவர் அர்ச்சனா, இன்று மருத்துவமனைக்கு மேல்மாடியில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, அவர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “எனது கணவரையும், குழந்தைகளையும் தொந்தரவு செய்யாதீர்கள். நான் அலட்சியமாகவோ, கவனக்குறைவாகவோ சிகிச்சை அளிக்கவில்லை. கர்ப்பிணிப் பெண்ணுக்கு இருந்த அசவுகரியங்களால்தான் அவர் உயிரிழக்க நேர்ந்தது. என் தற்கொலைக்கு பிறகாவது மருத்துவர்களை இதுபோன்று நடத்தமாட்டீர்கள் என நம்புகின்றன. அப்பாவி மருத்துவர்களை விட்டு விடுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவப் படிப்பில் கோல்ட் மெடலிஸ்ட்டான அர்ச்சனாவின் மரணத்திற்கு நியாயம் வேண்டி, சமூக வலைதளங்களில் #Justice_For_Dr_Archana என்னும் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அவரது கணவரும் கண்ணீர்விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Trisha-love-viral-photo-japan. திரிஷாவின் காதல் பதிவு: ஜப்பானில் வைரலாகும் தகவல்!
  • Views: - 1529

    0

    0