கடல் அலையோடு அலையாக கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்கள்… போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan29 May 2023, 2:19 pm
விசாகப்பட்டினம் கடற்கரையில் கரை ஒதுங்கிய லட்சக்கணக்கான மீன்களை பொதுமக்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
நேற்று மாலை வழக்கம் போல் விசாகப்பட்டினம் அருகே கடலில் அலைகள் காணப்பட்டன. இந்த நிலையில் சற்று நேரத்தில் அலைகள் வேகம் எடுத்து ஆர்ப்பரித்து வந்து கரையைத் தொட்டு சென்றன. அந்த அலைகளில் கடலில் இருந்து அடித்து வரப்பட்ட லட்சக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கி துள்ளி குதித்து துடித்து கொண்டிருந்தன.
இதனை பார்த்த பொதுமக்கள் ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான மீன்கள் துள்ளி குதிப்பதை பார்த்து ஆச்சரியமடைந்தனர். அதனை மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அள்ளிச் சென்றனர். அதே நேரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மீன்களை அலைகள் இழுத்து வந்து கடற்கரையில் கொட்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
எனவே, இந்த சம்பவத்தின் பின்னால் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு ஏதேனும் இருக்குமோ என்று பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.