கனமழை காரணமாக கேரளாவில் நிலச்சரிவு : 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.. நிலச்சரிவில் சிக்கிய சுற்றுலா வாகனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
13 November 2022, 12:09 pm

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நேற்று இரவு மூணாறு பகுதியில் 2 இடங்களில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. குண்டலா அணை மற்றும் மூணாறு எக்கோ பாயிண்ட் அருகே இந்த நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

குண்டலா பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது அந்த வழியே வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. இதில் ஒரு வாகனம் நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதி மக்கள் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர்.

கோழிக்கோடு அருகே உள்ள வடகராவில் இருந்து 3 வாகனங்களில் சிலர் சுற்றுலா புறப்பட்டுள்ளனர். அந்த வாகனங்களில் ஒன்று தான் நிலச்சரிவில் சிக்கியுள்ளது. அந்த வாகனம் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகனத்தில் டிரைவர் ரூபாஷ் (வயது 40) மட்டுமே இருந்துள்ளார்.

விபத்து பற்றி கேள்விப்பட்டதும் மூணாறு போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் காட்டு யானைகள் அடிக்கடி வரும் பிரதேசத்தில் சுற்றுலா வாகனம் கிடப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இருப்பினும் மழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக இரவில் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மீண்டும் மீட்பு பணியில் குழுவினர் ஈடுபட்டனர். மாயமான டிரைவர் ரூபாஷ் கதி என்ன? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.

அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். இதற்கிடையில் நிலச்சரிவு காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் தொடர்ந்து மழை நீடிக்கும் என்பதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மூணாறு-வட்டவாடா சாலையில் வாகனங்கள் செல்ல அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

  • ajith viral speech இத மட்டும் பண்ணுங்க …ரசிகர்களுக்கு மீண்டும் கோரிக்கை…துபாயில் இருந்து எமோஷனலாக பேசிய அஜித்..!