முன்னணி நடிகர், முன்னாள் மத்திய இணையமைச்சர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் காலமானார் : திரையுலகத்தினர் இரங்கல்!!

Author: Udayachandran RadhaKrishnan
11 September 2022, 10:21 am

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

பழம்பெரும் தெலுங்கு திரைப்பட நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

அவருக்கு வயது 83. இவரது மறைவு தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கிருஷ்ணம் ராஜூ மறைவுக்கு திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா மட்டுமின்றி இவர் அரசியலிலும் தீவிரமாக இருந்தார். சிரஞ்சீவின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியில் இவர் உறுப்பினராக இருந்தார். பாஜக, காங்கிரசில் இவர் உறுப்பினராக இருந்தார். அதேபோல் கோபி கிருஷ்ணா என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.

1992ல் முதல் முறை காங்கிரஸ் சார்பாக எம்எல்ஏ தேர்தலில் இவர் ஆந்திராவில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வி அடைந்தவர் பாஜகவில் இணைந்து 1998ல் அக்கட்சிக்காக காக்கிநாடாவில் போட்டியிட்டு எம்பியாக வென்றார். இந்த தேர்தலில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, மாநிலத்திலேயே அப்போது அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.

மத்திய அமைச்சரவையின் பல்வேறு கமிட்டிகளில் இவர் உறுப்பினராக இருந்துள்ளார். 1999ல் மீண்டும் பாஜக எம்பியாக இவர் லோக்சபா சென்றார். அதோடு பாஜகவின் கொறடாவாக இவர் நாடாளுமன்றத்தில் இருந்தார். இதன் பின் இவர் மத்திய இணை அமைச்சராக வெளியுறவுத்துறை, பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை கவனித்து வந்துள்ளார்.

இவரின் மரணம் அரசியலிலும், தெலுங்கு சினிமா உலகிலும் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!