ரூ.2 கோடி கேட்டு மீண்டும் சல்மான் கானுக்கு மிரட்டல்!

Author: Hariharasudhan
30 October 2024, 2:24 pm

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானிடம் ரூ.2 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது தொடர்பாக போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.

மும்பை: கடந்த அக்டோர் 12ஆம் தேதி நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தின் போது, தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக், அவரது மகனும், எம்எல்ஏவுமான ஜீஷன் சித்திக்கின் அலுவலகத்துக்கு முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு பாபா சித்திக் கொல்லப்பட்ட மறுநாள், அவரது கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டது.

இதற்கும், சல்மான் கானுடன் நெருங்கிப் பழகியதால் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்றைய முன்தினம், சல்மான் கான் மற்றும் எம்எல்ஏ ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு கொலை மிரட்டல் வந்தது. அப்போது, தான் கேட்ட பணத்தைக் கொடுக்கவில்லை என்றால், சல்மான் கான் மற்றும் ஜீஷன் சித்திக் ஆகிய இருவரையும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

பின்னர், இது தொடர்பாக, 20 வயதான முகம்மது தயாப் என்ற இளைஞர் நேற்று காலை நொய்டாவின் செக்டார் 39 பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார். குர்பான் கான் என அழைக்கப்படும் இவரிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று (அக்.30) மீண்டும் மும்பை போக்குவரத்து போலீசாருக்கு கொலை மிரட்டல் அழைப்பு வந்து உள்ளது.

இந்த மிரட்டல் அழைப்பில் பேசிய மர்ம நபர், 2 கோடி ரூபாய் தரவில்லை என்றால், சல்மான் கானை கொன்று விடுவேன் என மிரட்டி உள்ளார். பின்னர், இது தொடர்பாக அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப் பதிவு செய்த மும்பை வோர்லி போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அடுத்தடுத்த இரண்டு நாட்களில் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : தீபாவளியைக் கொண்டாட முடியுமா? 15 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு சல்மான் கானின் வீட்டுக்கு அருகில் மிரட்டல் கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. பின்னர், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம், கோல்டி ப்ரார் சல்மானுக்கு கொலை மிரட்டல் மின்னஞ்சல் வந்ததாக தகவல் வெளியானது. அதேபோல், இந்த ஆண்டு பன்வேலியில் உள்ள சல்மான் கானின் பண்ணை வீட்டில் போலி அடையாளங்கள் உடன் 2 பேர் ஊடுருவ முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!