அமைச்சருக்கு தொல்லை தந்த ஃபோன் கால்.. வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்ந்து குடைச்சல் : தூக்கம் கெட்ட அமைச்சர் எடுத்த முடிவு!!
Author: Udayachandran RadhaKrishnan29 July 2022, 3:51 pm
யாரோ வாங்கிய கடனுக்கான தவணையை செலுத்த கூறி அமைச்சருக்கு தொல்லை கொடுத்த லோன் ஆப் நிர்வாகிகள் சென்னை அருகே கைதாகினர்.
ஆந்திர மாநில விவசாய துறை அமைச்சர் காக்காணி கோவர்தன் ரெட்டி. அமைச்சரின் தொலைபேசி எண்ணுக்கு இரண்டு நாட்களுக்கு முன் போன் செய்த நபர் ஒருவர் அசோக் என்பவர் எங்களிடம் ரூ. ஒன்பது லட்சம் கடன் வாங்கி இருக்கிறார்.
அதற்கு உரிய இந்த மாத தவணைத் தொகையாக ரூ 25 ஆயிரம் செலுத்த வேண்டும். அவர் உங்களுடைய நம்பரை கொடுத்தார். எனவே நீங்கள் 25 ஆயிரம் ரூபாய் தவணை தொகை செலுத்த வேண்டும் என்று கூறினார். தொலைபேசியை எடுத்து அமைச்சரின் உதவியாளர் அதுபோல் எங்களுக்கு யாரையும் தெரியாது என்று கூறி இருக்கிறார்.
ஆனாலும் விடாது கருப்பு என்பது போல் அந்த நபர் மீண்டும், மீண்டும் அமைச்சரின் தொலைபேசிக்கு போன் செய்து தொல்லை கொடுத்து இருக்கிறார். எனவே அந்த நம்பரை அமைச்சரின் உதவியாளர் பிளாக் லிஸ்டில் வைத்துவிட்டார்.
ஆனால் வேறு ஒரு நம்பரில் இருந்து மீண்டும் போன் செய்த அந்த நபர் தவணை தொகை 25 ஆயிரம் ரூபாய் உடனே செலுத்துங்கள் என்று கூறி இருக்கிறார். இதுபோல் சுமார் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு எண்களில் இருந்து அமைச்சரின் செல்போனுக்கு அழைப்புகள் வந்துள்ளன.
இந்த தொல்லையை பொறுக்க முடியாத அமைச்சர் இது பற்றி நெல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நெல்லூர் போலீசார், சென்னை அருகே உள்ள திருமங்கலத்தில் அலுவலகம் திறந்து அமைச்சர்கள், அதிகாரிகள் உட்பட பலருக்கு இது போல் தொல்லை கொடுத்த நபர்களை கூண்டோடு அள்ளி வந்து நெல்லூர் காவல் நிலையத்தில் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் லோன் ஆப்ப்களை ஒரு நபர் தன்னுடைய மொபைல் போனில் பதிவிறக்கம் செய்தால் அந்த மொபைல் போனில் காண்டாக்ட் லிஸ்டில் இருக்கும் அனைத்து எண்களும் அந்த லோன் ஆப் நிறுவனத்தின் கம்ப்யூட்டருக்கு சென்று விடும்.
இது போன்ற லோன் ஆப் நிறுவனங்களை நடத்தும் நபர்கள் புறநகர் பகுதிகளில் பெரிய ஹால் ஒன்றை வாடகைக்கு பிடித்து சக்திக்கு தகுந்தார் போல் 100 முதல் 300 பேர் வரை ஆட்களை பணிக்கு அமர்த்தி தங்களுக்கு கிடைத்த செல்போன் எண்கள் மூலம் அமைச்சர்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரை பலருக்கு இதுபோல் போன் செய்து தொல்லைகளை கொடுத்து வருவது தெரியவந்துள்ளது.