விலைவாசி உயர்வுக்கு எதிராக காங்., போராட்டம்… குண்டுக்கட்டாக கைது.. எம்.பி. ஜோதிமணி ஆடை கிழிப்பு : மீண்டும் வீடியோவை வெளியிட்டு ஆவேசம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 July 2022, 5:49 pm
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியது. அதில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அப்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் குணமடைந்து அவை திரும்பிய பின் எதிர்க்கட்சிகள் விவாதம் நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்கள் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது.
ஆனால் உடனடியாக விவாதத்தை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படும் நிலை உள்ளது.
இதனிடையே நேற்று முன்தினம், மக்களவை தலைவரின் இருக்கை முன்பு நின்று பதாகைகள் ஏந்தி அமளியில் ஈடுபட்டதற்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இதுவரை மொத்தமாக 24 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இதனிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக செல்ல முயன்றபோது, காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது ஜோதிமணியின் ஆடை கிழிக்கப்பட்டுள்ளது.
Hon speaker @ombirlakota ji,we haven't done anything to brought down d dignity of d house except raising d issue of Prise rise & GST.But we are suspended. Is this d way women MP's r treated repeatedly? Don't we deserve d dignity?It wl not deter us.But its shameful to all of us. pic.twitter.com/12fZCI0GuF
— Jothimani (@jothims) July 27, 2022
இதுகுறித்து வீடியோ வெளியிட்டு ஜோதிமணி கூறுகையில், எத்தனை முறை தங்கள் மீது அடக்கு முறையை ஏவினாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்போம் என ஆவேசமாக தனது கிழிந்த ஆடையை காண்பித்து ஆவேசமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி கைது செய்யப்ப்டட போது இதே பிரச்சனையை அவர் எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.