மான் வேட்டைக்கு சென்ற கும்பல் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு : 3 போலீசார் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்..
Author: Babu Lakshmanan14 May 2022, 3:39 pm
வனப்பகுதியில் மான் வேட்டையாடுபவர்களை தடுக்கச் சென்ற போலீசார் மீது வேட்டை கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 போலீசார் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குணா மாவட்டத்தில் உள்ள அரோன் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் பிளாக் பக்ஸ் எனப்படும் அரிய வகை மான்களை வேட்டையாடுவதற்காக சட்டவிரோத கும்பல் நுழைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பகுதிக்கு போலீசார் விரைந்து சென்றனர்.
அப்போது, பல மான்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டன. மான்களை வேட்டையாளர்களை சுற்றி வளைத்து போலீசார் பிடிக்க முயன்றனர். அந்த சமயம் மோட்டார் சைக்கிளில் வந்த வேட்டைக்காரர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசாரும் தாக்குதல் நடத்தினர்.
இதில், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஜாதவ், தலைமை காவலர் சாந்த் குமார் மினா மற்றும் காவலர் நீரஜ் பார்கவ் ஆகியோர் குண்டடி பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். போலீஸ் வாகனத்தின் ஓட்டுநரும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் நவ்ஷாத் மேவதி என்ற வேட்டைக்கார நபரும் கொல்லப்பட்டார்.
அடர்ந்த வனப்பகுதியாக இருந்ததை சாதகமாக பயன்படுத்தி வேட்டைக்காரர்கள் தப்பித்துக்கொண்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
0
0