மகாராஷ்டிரா, ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல் எப்போது? ECI அறிவிப்பு!
Author: Hariharasudhan15 October 2024, 4:49 pm
மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும், ஜார்கண்ட்டில் இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: டெல்லியில் உள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதி மற்றும் நாடு முழுவதும் 48 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்றட் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தேதியை அறிவித்தனர்.
இதன்படி, மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதன் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும்.
இந்த தேர்தலில் பாஜக, சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ் அடங்கிய ஆளும் மகாயுதிட் கூட்டணியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஷ் அகாடி கூட்டணியும் மோதுகின்றன.
இதையும் படிங்க: கனடா தூதரை வெளியேற்றும் இந்தியா.. கனடாவின் பதில் என்ன?
அதேபோல், 81 தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதன்படி, 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 13ஆம் தேதியும், 38 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல்கள் முறையே அக்டோபர் 18, 22 ஆகிய நாட்களில் தொடங்கி அக்டோபர் 25, 29 ஆகிய நாட்களில் நிறைவடைகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான இரண்டு கட்ட வாக்குப்பதிவிலும் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன.