எல்லாம் பங்காளிவே.. சூடுபிடித்த மகாராஷ்டிரா தேர்தல் களம்.. அடுத்தடுத்து களமிறங்கும் முக்கிய வேட்பாளர்கள்!

Author: Hariharasudhan
25 October 2024, 3:11 pm

மகாராஷ்டிராவில் மகாயுதி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இழுபறியான நிலையில், வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மும்பை: நாட்டின் மிக முக்கிய மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிராவில் நவம்பர் 20ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிட ஆளும் மகாயுதி (Mahayuti) கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணியும் களம் காண்கின்றன. இதனால் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் இருமுனைப் போட்டி மட்டுமே நிலவுகிறது.

இவற்றில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக, சிவசேனா (ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அதேபோல், எதிர்கட்சிகளின் மகா விகாஷ் அகாடி (Maha Vikas Aghadi) கூட்டணியில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், இரு தரப்பிலும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் நீடித்தது. அதிலும், எதிர்கட்சி கூட்டணி சற்று வேகமெடுத்தது போல் தெரிந்ததால், மும்பை களம் பரபரப்பானது. ஆனால், ஆளும் தரப்பு கூட்டணியில் இழுபறி நீடித்தாலும், தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளன. அதன் அடிப்படையில், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி முதலில் தொகுதிப் பங்கீடை நிறைவு செய்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், வேட்பாளர்களையும் அக்கூட்டணி அறிவித்துள்ளது. இதன்படி, பாஜக 99 இடங்களிலும், சிவசேனா 45 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 38 இடங்களிலும் களம் காணும் வகையில் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. ஆனால், மகா விகாஸ் அகாடி கூட்டணியில் தொகுதிப் பங்கீடை நிறைவு செய்ய தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது.

Sarath pawar

இதன்படி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா மற்றும் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளுக்கு சரிசமமாக 85 தொகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த 3 முக்கிய கட்சிகளும் தலா 85 தொகுதிகளில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் முதலாவதாக சிவசேனாவில் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 65 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: திமுக கூட்டணி உடையப்போகுது.. WAIT AND SEE : சஸ்பென்ஸ் வைத்த முன்னாள் அமைச்சர்!

இந்தப் பட்டியலில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே இடம் பெற்றுள்ளார். அதேபோல், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சித் தரப்பில், முதற்கட்டமாக 45 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பாராமதி தொகுதியில் அஜித் பவார் களம் காணும் நிலையில், அவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) சார்பில் அஜித் பவாரின் தம்பி மகன் யுகேந்திர பவார் போட்டியிடுகிறார். இதன் மூலம், தனது பெரியப்பாவை எதிர்த்து அவரது தம்பி மகன் அரசியல் யுத்தத்தில் நிற்கிறார்.

முன்னதாக, மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இரண்டாகப் பிரிந்த பிறகு 2024 மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவில், மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 13, உத்தவ் சிவசேனா 9, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் 8 என மொத்தம் 30 தொகுதிகளிலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பாஜக 9, ஷிண்டே சிவசேனா 7, அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் 1 என மொத்தம் 17 தொகுதிகளிலும் வென்றன.

  • Siragadikkai Aasai Vidhya Reveal the Truth about Leaked Video மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!