பாஜகவின் கோட்டைக்கு குறி? வெல்லப்போவது யார்?.. உறுதியானது வெற்றி : வெளியானது சர்வே முடிவுகள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
15 December 2023, 4:58 pm

பாஜகவின் கோட்டைக்கு குறி? வெல்லப்போவது யார்?.. உறுதியானது வெற்றி : வெளியானது சர்வே முடிவுகள்!!!

அடுத்தாண்டு நடக்கும் ஹரியானா மாநிலச் சட்டசபைத் தேர்தல் தொடர்பான சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. ஹரியானா என்பது சின்ன மாநிலமாக இருந்தாலும், அது டெல்லிக்கு மிக அருகில் இருப்பதாலும், இந்தி ஹார்ட் லேண்ட்களில் ஒன்றாக இருப்பதாலும் அது ரொம்ப முக்கியத்துவம் பெறுகிறது. இதனால் அங்கே தேர்தல்களிலும் கடும் போட்டியே நிலவுகிறது.

இதற்கிடையே ஹரியானா மாநிலத்தின் சட்டசபைத் தேர்தல்கள் குறித்த முதற்கட்ட சர்வேயை இப்போது ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் மொத்தம் 90 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பெரும்பான்மையைப் பெற எந்தவொரு கட்சியும் குறைந்தது 46 இடங்களில் வெல்ல வேண்டும். அங்கே பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவுகிறது. இது தவிர ஜனநாயக ஜனதா கட்சி, இந்தியத் தேசிய லோக் தள் ஆகிய கட்சிகளும் இப்போது களத்தில் உள்ளன.

ஜன்மத் அமைப்பு வெளியிட்டுள்ள சர்வேயில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அங்கே மொத்தமுள்ள 90 இடங்களில் காங்கிரஸ் 48 முதல் 50 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் தற்போது ஆளும்கட்சியாக இருக்கும் பாஜக 31 முதல் 33 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஹரியானாவில் கடந்த 10 ஆண்டுகளாகவே பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. கடந்த 2014இல் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை பிடித்த நிலையில், 2019இல் பாஜக கூட்டணிக் கட்சிகளின் உதவியுடன் ஆட்சியைப் பிடித்தது. இந்தச் சூழலில் தான் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கே காங்கிரஸ் ஆட்சி அமையும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜன்மத் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2019இல் நடந்த தேர்தலில் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. அதில் பாஜக 40 இடங்களை வென்ற நிலையில், காங்கிரஸ் 31 இடங்களில் வென்றது. அதன் பிறகு பாஜக ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் ஏழு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இந்த முறை தேர்தலில் மனோகர் லால் கட்டார் தலைமையிலேயே பாஜக தேர்தலை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் காங்கிரஸ் பூபிந்தர் சிங் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. தொடர்ந்து 10 ஆண்டுகள் ஹரியானாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இருக்கும் மனநிலையைக் காங்கிரஸ் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலும் என்பதில் சந்தேகம் இல்லை.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?