திருமண பரிசாக வந்த ஹோம் தியேட்டர்… பிரித்து பார்த்த போது மாப்பிள்ளை உள்பட 2 பேர் பலி ; போலீசார் விசாரணையில் திடீர் திருப்பம்..!!

Author: Babu Lakshmanan
5 April 2023, 3:54 pm

சத்தீஷ்கரில் திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டரை பிரித்து பார்த்த போது மாப்பிள்ளை உள்பட 2 பர் உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கபிர்தம் மாவட்டத்தில் உள்ள ஷமாரி கிராமத்தைச் சேர்ந்த ஹேமேந்திர மேராவி (22) என்பவருக்கு இரு தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தடபுடலாக நடைபெற்ற இவரது திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு, மணமக்களை வாழ்த்தி சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்கள் பல்வேறு பரிசு பொருட்களையும் வழங்கிச் சென்றனர்.

தனது திருமணத்திற்கு வந்த பரிசு பொருட்களை புதுமாப்பிள்ளை ஹேமேந்திர மேராவியும், அவரது சகோதரரான ராஜ்குமார் என்பவரும் பிரித்து பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது, ஹோம் தியேட்டர் ஒன்றும் திருமண கிஃப்ட் ஆக வந்திருந்ததை பார்த்து, அதனை பிரித்து, பரிசோதித்துள்ளனர்.

அப்போது பயங்கர சத்தத்துடன் ஹோம் தியேட்டர் வெடித்து சிதறியது. இதில், வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. மாப்பிள்ளையான ஹேமேந்திர மேராவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது சகோதரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்களும் வெடித்து சிதறிய பொருட்களை எடுத்து ஆய்வு செய்ததில், ஹோம் தியேட்டருக்குள் வெடிமருந்துகளை நிரப்பி வெடிக்கச் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்தப் பரிசை யார் கொடுத்தது என்று விசாரணை நடத்தினர். அதில், திடுக்கிடும் தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. மணமகளின் முன்னாள் காதலனான சஞ்சு மார்கம் என்பவர் ஹோம் தியேட்டருக்குள் வெடிமருந்து நிரப்பி கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. தனது முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்வதை பிடிக்காமல் இப்படி செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி