வேறு சாதி என்பதால் எதிர்ப்பு.. பெற்றோரையும் மீறி காதலனை கரம் பிடித்த எம்பிபிஎஸ் மாணவி : காதலன் வீட்டை சூறையாடிய பெண் வீட்டார்!!
Author: Udayachandran RadhaKrishnan10 October 2022, 1:59 pm
ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சீனிவாஸ், ஜான்சி தம்பதியின் மகள் சுஷ்மா. திருப்பதியில் உள்ள கல்லூரியில் சுஷ்மா எம்பிபிஎஸ் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.
சித்தூர் மாவட்டம் புஜ்ஜி நாயுடு கண்டிகையை சேர்ந்த மோகன கிருஷ்ணா, திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் பிசியோதெரபிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சுஷ்மா, மோகன கிருஷ்ணா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நட்பு வெகு விரைவில் காதலாக மலர்ந்தது.
தங்களுடைய காதலை பற்றி இரண்டு பேரும் பெற்றோரிடம் தெரிவித்து திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினர். ஆனால் சுஷ்மா குடும்பத்தினர் இரண்டு பேரும் வேறு, வேறு ஜாதி என்பதால் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் சுஷ்மா குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளது. மோகன கிருஷ்ணாவின் குடும்பம் நடுத்தர குடும்பம். எனவே சுஷ்மா பெற்றோர் திருமணத்திற்கு கடும் எதிர்த்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி இரண்டு பேரும் திருப்பதி சந்திரகிரியில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். தன்னுடைய மகள் மோகன கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டது சுஷ்மாவின் தாய் ஜான்சிக்கு தெரியவந்தது.
இதையடுத்து கடந்த 7ஆம் தேதி அடியாட்களுடன் புஜ்ஜி நாயுடு கண்டிகைக்கு வந்த சுஷ்மாவின் பெற்றோர் நள்ளிரவு நேரத்தில் மோகன கிருஷ்ணா வீடு மீது தாக்குதல் நடத்தி சுவரை உடைத்து சுஷ்மாவை அடித்து இழுத்து சென்றனர்.
அப்போது மோகன கிருஷ்ணா மற்றும் அவருடைய பெற்றோர் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது. குண்டூரில் ரகசிய இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த சுஷ்மா அங்கிருந்து தப்பித்து டாக்ஸி மூலம் நேற்று திருப்பதிக்கு வந்து சேர்ந்தார்.
வரும் வழியில் மோகன கிருஷ்ணாவுக்கு போன் செய்த சுஷ்மா நேராக போலீஸ் எஸ்.பி அலுவலகத்திற்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார். திருப்பதி எஸ்.பி.யிடம் சுஷ்மா நடந்த சம்பவங்களை கூறி பெற்றோர் மூலம் தங்களுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார் அளித்தார்.
இது தொடர்பாக சந்திரகிரி காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்த திருப்பதி எஸ் பி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும், சுஷ்மா, மோகன கிருஷ்ணா ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கவும் உத்தரவிட்டார்.
எஸ்பி உத்தரவின் பேரில் சந்திரகிரி காவல் நிலையத்தில் சுஷ்மாவின் பெற்றோர் சீனிவாஸ், ஜான்சி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சுஷ்மா மோகன கிருஷ்ணா ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுஷ்மாவின் பெற்றோர் சீனிவாஸ் ஜான்சி மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சந்திரகிரி போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
0
0