வானில் இருந்து விழுந்த உலோக பந்து : செயற்கைக்கோளின் உதிரி பாகங்களா? பதறிய மக்கள் : குஜராத்தில் அதிர்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan13 May 2022, 10:12 pm
குஜராத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை நேரத்தில், திடீரென சில விண்வெளி கழிவுகள் வானத்திலிருந்து கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிகழ்வை தொடர்ந்து அப்பகுதிக்கு தடயவியல் ஆய்வகத்தை சேர்ந்த நிபுணர் குழு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். நேற்று மாலை 4.45 மணியளவில் 5 கிலோ எடையுடைய கருப்பு நிற உலோக பந்தொன்று குஜராத்தின் அனந்த் என்ற மாவட்டத்தை சேர்ந்த பாலெஜ் என்ற கிராமத்தில் விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்ற சம்பவங்கள், அதேமாவட்டத்தை சேர்ந்த கம்போலாஜ் மற்றும் ராம்புரா உள்ளிட்ட கிராமங்களிலும் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த மூன்று கிராமங்களும் 15 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. உலோக பந்துபோன்ற இவை, கீழே விழுந்து லேசாக உடைந்திருக்கிறது.
மூன்று இடங்களில் விழுந்த இவை ஒரே ஒரு இடத்தில் மட்டும், வீடொன்றின் மிக அருகில் அவை விழுந்திருக்கிறது. பிற இரு இடத்திலும் திறந்தவெளியில் விழுந்திருக்கிறது.
விண்வெளி துகள்கள் விபத்தால் எவருக்கும் சேதமெதுவும் ஏற்படாமல் நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டுள்ளது. வானிலிருந்து விழுந்த அந்த உலோக பந்து, ஏதோவொரு செயற்கைக்கோளின் உதிரிபாகங்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவை என்ன வகை செயற்கைக்கோளை சேர்ந்தவை என்பது இன்னும் அறியப்படவில்லை.