பெண் அமைச்சரிடமே செல்போனை அபேஸ் செய்த கொள்ளையன்… 3 தனிப்படை அமைத்து திருடனை பிடித்த போலீசார்… பாராட்டிய அமைச்சர்…!!
Author: Babu Lakshmanan22 April 2022, 10:34 am
திருப்பதியில் முகாமிட்டுள்ள அமைச்சர் ரோஜாவின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் விரைந்து செயல்பட்டு பிடித்தனர்.
திருப்பதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோஜா, இன்று காலை திருப்பதியில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கினார். அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ரோஜா தனது முதல் நிகழ்ச்சியாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆந்திர மாநில விளையாட்டு ஆணையம் சார்பிலான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
இந்நிலையில், தனது செல்போனை தவற விட்டதை உணர்ந்த ரோஜா போலீசாருக்கு புகார் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் 3 தனிப்படைகள் ஆக பிரிந்து செல்போன் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
முதலில் ஸ்ரீ பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக சாலையில் செல்போன் சிக்னலை ட்ரெஸ் செய்த போலீசார், இரண்டாவது முறையாக திருப்பதி ரூயா மருத்துவமனை அருகே செல்போன் சிக்னலை ட்ரெஸ் செய்து காரில் சென்று கொண்டிருந்த நபரிடமிருந்து, செல்போனை கைப்பற்றி அமைச்சர் ரோஜாவிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீ பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அமைச்சர் ரோஜாவை சந்திக்க வந்த நபர் செல்போன் திருடிச் சென்றது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் அவர் எங்கு எப்போது செல்போன் திருட்டில் ஈடுபட்டார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது.
அமைச்சர் ரோஜாவின் செல்போன் திருடு போன சம்பவம் சில மணி நேரங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.