செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க 6 மாதம் வேண்டுமா..? தமிழக டிஜிபி, உள்துறை செயலருக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!
Author: Babu Lakshmanan8 August 2023, 2:22 pm
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கை முடிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை செய்யப்பட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில், நேற்று முதல் 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜி பண மோசடி புகார் தொடர்பான வழக்கில் விரிவான விசாரணை மேற்கொள்ள 6 மாதங்கள் அவகாசம் கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார், உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கு தொடர்பாக இன்னும் எவ்வளவு காலம் அவகாசம் வேண்டும் என்பதை நீங்களே (டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர்) நேரில் வந்து கேளுங்கள் என்றும்,
செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை முடிக்க 6 மாத காலம் அவகாசம் வழங்க முடியாது என்றும் நீதிபதிகள் விக்ரம் நாத், அஸானுதீன் அமானுல்லா ஆகியோா் அடங்கிய அமா்வு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30-க்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர். அதோடு, உரிய காரணங்களை தெரிவித்தால் மட்டுமே கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியதுடன், டிஜிபி மற்றும் உள்துறை செயலாளர் ஆஜராகும் உத்தரவை திரும்பப் பெறுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், செந்தில் பாலாஜி வழக்கை துரிதப்படுத்த வேண்டிய கட்டாயம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.