‘பீஸ் பீஸ் ஆக்கிடுவேன்’… பிரதமருக்கு கொலை மிரட்டல் – திமுக அமைச்சர் மீது டெல்லியில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
Author: Babu Lakshmanan14 March 2024, 11:04 am
பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அண்மையில் சென்னையை அடுத்துள்ள பம்பலில் நடந்த திமுக நிகழ்ச்சியில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் கலந்து கொண்டு பேசினார். நாங்கள் எவ்வளவோ பிரதமரை நாங்கள் சந்தித்துள்ளோம். ஆனால், இவ்வளவு மட்டமாக பேசக் கூடிய பிரதமரை நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை. திமுகவை அழித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். நான் மட்டும் அமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்திருந்தால், மோடியை பீஸ் பீஸ் ஆக்கிடுவேன், எனக் கூறினார்.
அமைச்சர் தா.மோ. அன்பரசனின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சத்தியரஞ்சன் தமிழக அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கொலை மிரட்டல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் அமைச்சர் தாமோ அன்பரசன் மீது டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஏற்கனவே, சனாதனம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் உதயநிதி மீது வடமாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில், மற்றொரு திமுக அமைச்சர் தாமோ அன்பரசனுக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.