இந்த வாரம் இவங்க இப்படி மிரட்டறாங்க.. அடுத்த வாரம் மோடி வருவாரு பாருங்க.. எம்பி சு.வெங்கடேசன் ட்விட்!!
Author: Udayachandran RadhaKrishnan4 August 2023, 8:53 pm
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி பேசிக்கொண்டிருக்கும்போது, டெல்லி அரசின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் உள்ள இந்த சட்ட மசோதாவுக்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதனால் கோபமடைந்த மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வாயை மூடிக்கொண்டு அமைதியாக உட்காருங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் என எச்சரித்தார்.
எதிர்க்கட்சி தலைவர்களை குறிவைத்து அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறையை மத்திய பாஜக அரசு ஏவி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் பாஜக அமைச்சரின் இந்தப் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ (I.N.D.I.A – Indian National Developmental Inclusive Alliance – இந்திய தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி) என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘இந்தியா’ என கூட்டணிக்குப் பெயர் வைத்ததற்கு எதிராக பாஜக எம்.பிக்கள் ராஜ்யசபாவில் பேசி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த 2 நிகழ்வுகளையும் குறிப்பிட்டு ட்விட்டரில் விமர்சித்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன். பாஜக மத்திய இணை அமைச்சர் மீனாட்சி லேகி, வெளிப்படையாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை மிரட்டுகிறார், ஆனால், பிரதமர் மோடி அடுத்த வாரம் வந்து ஜனநாயகம் பற்றி பேசுவார் என கிண்டல் செய்துள்ளார் சிபிஐஎம் எம்.பி சு.வெங்கடேசன்.
சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” “அமைதியாக இருங்கள். இல்லையெனில் அமலாக்கத்துறை உங்களது வீட்டுக்குவரும்” என்று மக்களவையிலும் “இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்” என்று மாநிலங்களவையிலும் இந்த வாரம் ஆளுங்கட்சியினர் பேசியுள்ளனர். அடுத்த வாரம் ஜனநாயகத்தையும் தேசத்தின் பெருமையையும் பற்றி பிரதமர் வந்து பேசுவார்.” என விமர்சித்துள்ளார்.