சிலிண்டர் வாங்க முடியாத நிலை.. பச்சையா காய்கறிகளை சாப்பிடுவதா? நாடாளுமன்றத்தில் கத்தரிக்காயை கடித்து குரல் கொடுத்த எம்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 August 2022, 5:57 pm

சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயருகிறது, பச்சையாக காய்கறிகளை சாப்பிட வேண்டும் என அரசு நினைக்கிறதா என திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. கத்தரிக்காயை கடித்து சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. கடந்த 2 வாரங்களாக நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று நாடாளுமன்றம் கூடியதும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக முதலில் 12 மணி வரையிலும் பின்னர் 2 மணி வரையிலும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, மக்களவையில் விவாதம் நடைபெற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். அப்போது, மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் 4 பேருக்கு எதிரான நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து 4 பேர் மீதான நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக ஓம் பிர்லா அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, இடைநீக்கம் செய்யப்பட்ட மாணிக் தாகூர், ஜோதி மணி, ரம்யா ஹரிதாஸ், பிரதாபன் ஆகியோர் அவை நடவடிக்கையில் பங்கேற்றனர்.

இதன் பின்னர் மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, “சிலிண்டர் வாங்க முடியாத அளவுக்கு விலை உயருகிறது; பச்சையாக காய்கறிகளை சாப்பிட வேண்டும் என அரசு நினைக்கிறதா” எனக் கூறி கத்தரிக்காயை கடித்துக் காட்டினார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ்.

தொடர்ந்து “சிலிண்டர் விலை உயர்வு ஏழை மக்களை எப்படி பாதிக்கிறது என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். கடந்த சில மாதங்களில் நான்கு மடங்கு விலை உயர்ந்துள்ளது. ஏழைகள் 1100 ரூபாய் எப்படி செலவழிப்பார்கள்? என கேள்வி எழுப்பினார்.

முன்னதாக “ஏழைகள் இலவசமாக 2 வேளை சாப்பிட முடிகிறது என்றால் நாம் பிரதமருக்கு நன்றி சொல்ல வேண்டாமா?” என மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் பாஜக எம்.பி. நிஷிகந்த் துபே பேசினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 786

    0

    0