JCB-ஐ வைத்து ATM மெஷினை ஆட்டைய போட்ட கும்பல் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ காட்சி..!!
Author: Babu Lakshmanan25 April 2022, 1:34 pm
மும்பை அருகே ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு ஏடிஎம் மெஷினை பெயர்த்து எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாளுக்கு நாள் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏடிஎம் மையங்களில் கொள்ளை போகும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் மெஷினை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லீ பகுதியில் ஒரு ஏடிஎம் மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் ஜேசிபி வாகனத்தை கொண்டு வந்து, ஏடிஎம் இயந்திரத்தை மட்டும் லாவகமாக தகர்த்து எடுத்துக்கொண்டு போகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.டி.எம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ, இப்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.