மனைவியை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் பார்சல் : 5 மாதமாக மகள் நலமாக இருப்பதாக பெற்றோரை ஏமாற்றி நாடகமாடிய கொடூரக் கணவன்!!

Author: Udayachandran RadhaKrishnan
31 May 2022, 8:13 pm

ஆந்திரா : விவாகரத்து அளிக்க மறுத்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன் சூட்கேசில் அடைத்து ஏரியல் வீசிய கொடூர சம்பவம் 5 மாதங்களுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் திருப்பதி கோரலகுண்டா பகுதியை சேர்ந்த திருமலா ஆச்சாரி – மல்லிகா தம்பதியினரின் மகள் பத்மா. இவருக்கு திருப்பதி சத்திய நாராயணபுரம் பகுதியைச் சேர்ந்த பாண்டுரங்கா ஆச்சாரி – ராணி தம்பதியினரின் மகன் மென் பொறியாளர் வேணுகோபால் என்பவருடன் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த 4 மாதத்தில் பத்மாவை வீட்டில் அடைத்து வைத்து கதவை பூட்டி வெளியே செல்வது மற்றும் நிர்வாணமாக்கி அடிப்பது என வேணுகோபால் கொடுமைப்படுத்தி வந்தார்.

கணவர் கொடுமை தாங்காமல் விவாகரத்து பெற முடிவு செய்த பத்மாவிடம் பெற்றோர்கள் பலமுறை சமரசம் செய்து கணவருடன் சேர்த்து வைத்து வந்தனர்.

வேணுகோபால் கொடுமைகள் எல்லை மீறி செல்லவே பொறுத்துக்கொள்ள இயலாத பத்மா கடந்த ஆண்டு மீண்டும் தாய் வீட்டுக்கு வந்தார்.

இதையடுத்து விவாகரத்துக் கோரி வேணுகோபால் வழக்கு தொடர்ந்த நிலையில்
ஜனவரி மாதம் 4ம் தேதி பத்மாவை வேணுகோபால் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார்.

இதை உண்மை என நம்பி பத்மா மீண்டும் கணவர் வேணுகோபால் வீட்டுக்கு சென்ற நிலையில் வீட்டில் வைத்து பத்மாவிடம் விவாகரத்து தரக்கோரி வேணுகோபால் வாக்குவாதம் செய்தார் அதற்கு பத்மா மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வேணுகோபால் தந்தை பாண்டு ரங்காச்சாரி தாய் ராணி மற்றும் நண்பர் சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து பத்மாவை அடித்துக் கொலை செய்து உடலை சூட்கேசில் அடைத்து பின்னர் போர்வையால் கட்டி காரில் எடுத்து சென்று திருப்பதி ரேணிகுண்டா அருகிலுள்ள வெங்கடாபுரம் ஏரியில் வீசினார்.

பின்னர் பெற்றோரை திருப்பதி அருகே காரிலிருந்து இறக்கிவிட்ட வேணுகோபால் நண்பர் சந்தோஷ் உடன் ஐதராபாத் சென்றார். பத்மா பெற்றோர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதெல்லாம் மகள் நலமாக இருப்பதாக 5 மாத காலமாக பெற்றோரை நம்ப வைத்தார்.

இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி விவாகரத்து வழக்கு சார்பாக கணவன் மனைவி இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்த நிலையில் வேணுகோபால் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதனால் சந்தேகமடைந்த பத்மா தாயார் இம்மாதம் 27ஆம் தேதி திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் மகளை காணவில்லை என புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் வேணுகோபாலிடம் விசாரணை மேற்கொண்டதில் மனைவியை அடித்துக் கொலை செய்து ஏரியில் வீசியது அம்பலமானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வேணுகோபால் அழைத்துச் சென்ற போலீசார் வேணுகோபால் அடையாளம் காட்டிய பகுதியில் நீச்சல் வீரர்கள் உதவியுடன் சடலத்தை தேடிய நிலையில் ஐந்து மாதத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு ஏரியில் வீசப்பட்ட பத்மாவின் அழுகிய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து வேணுகோபால் அவருடைய தந்தை மற்றும் தாய் ஆகியோரைக் கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள நண்பர் சந்தோஷை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 807

    0

    0