தீவிரவாதிகளின் சதித்திட்டமா? மங்களூருவில் ஓடும் ஆட்டோவில் வெடித்த மர்மப்பொருள் : போலீசார் அதிர்ச்சி தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan20 November 2022, 10:44 am
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று வெடித்தது.
சிறிது நேரத்தில் ஆட்டோவிலும் தீப்பிடித்தது. இதனை பார்த்த அந்தப்பகுதியில் இருந்தவர்கள் விரைந்து வந்து ஆட்டோவில் பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஆட்டோ டிரைவரும், ஒரு பயணியும் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மூத்த போலீஸ் அதிகாரிகளும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் மர்ம பொருள் வெடித்ததால், அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.
தடயவியல் நிபுணர்கள், ஆட்டோவில் ஆய்வு செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்து குக்கர் ஒன்று எடுக்கப்பட்டது. இதனால் குக்கர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
#Mangaluru
— E Chidambaram. (@JaiRam92739628) November 20, 2022
மங்களூர் ஆட்டோவில் குண்டு வெடிப்பு பயங்கரவாத செயல் என்று டிஜிபி அறிவிப்பு pic.twitter.com/rPDLRHgLMY
ஆனாலும், ஆட்டோவில் வெடிபொருட்கள் எடுத்துச் செல்லப்பட்ட போது வெடி விபத்து ஏற்பட்டதா அல்லது குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது உறுதியாக தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.