நேரு, வாஜ்பாய், மன்மோகன்சிங்… நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உணர்வுப்பூர்வமாக பேசிய விஷயம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2023, 1:34 pm

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் பழைய நாடாளுமன்றத்தின் 75ஆண்டுகால சாதனைகள் குறித்தும் அதன் அனுபவங்கள் குறித்தும் பிரதமர் மோடி தற்போது பேச்சை தொடங்கியுள்ளார்.

அதில் பிரதமர் மோடி பேசுகையில், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு விடை கொடுத்துவிட்டோம். முதன் முறையாக நாடாளுமன்றத்தில் நுழையும்போது நான் நாடாளுமன்ற வாசலில் விழுந்து வணங்கினேன்.

அதிக அளவு பெண்களின் பங்களிப்பு இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. நாட்டின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் வகையில் அமைந்தது இந்த நாடாளுமன்றம். இந்தியர்களின் வியர்வையால் உருவானது நாடாளுமன்றம். பல உணர்வுபூர்வமான நேரங்களுடன் நாடாளுமன்றத்திற்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது.

இந்த வரலாற்று கட்டிடத்தில் இருந்து நாம் அனைவரும் விடைபெறுகிறோம். சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேயர்களின் ஆலோசனை மைய கூடமாக இருந்தது இந்த நாடாளுமன்றம். நமது நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு, இது பாராளுமன்ற கட்டிடம் என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு ஆங்கிலேயர்களால் முன்னெடுக்கப்பட்டது என பழைய நாடாளுமன்றம் பற்றி பிரதமர் மோடி பெருமை பொங்க பேசினார்.

மேலும், நாடாளுமன்றத்தை இதுவரை பாதுகாத்தவர்களுக்கு நன்றி. நாடாளுமன்றத்தை காப்பாற்ற உயிர்துறந்தவர்களை இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன். நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஜனநாயகத்தின் மீது காட்டப்பட்ட வன்முறை. நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கை அப்படியே தொடர வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்.

கொரோனா காலத்திலும் நாம் நாடாளுமன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டோம் எனவும் பிரதமர் மோடி தனது தொடக்க உரையில் பேசினார்.

முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்றார் நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளனர். இந்திய ஜனநாயகத்திற்கு மிக பெரிய பங்களிப்பை கொடுத்தவர் டாக்டர் அம்பேத்கர் . பசுமை புரட்சிக்கு வித்திட்டவர் லால் பகதூர் சாஸ்திரி என முன்னாள் பிரதமர்களை குறிப்பிட்டு வாழ்த்தி பேசினார் பிரதமர் மோடி.

ஜி20 மாநாட்டின் வெற்றியை நீங்கள் ஒருமனதாகப் பாராட்டியுள்ளீர்கள். உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஜி20 மாநாட்டின் வெற்றி என்பது 140 கோடி குடிமக்களின் வெற்றி. இது இந்தியாவின் வெற்றி, ஒரு தனிநபரின் வெற்றியோ, கட்சியின் வெற்றியோ அல்ல. நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய வெற்றி. இந்தியாவின் தலைமைதுவம் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும் இந்தியா பதில் கூறியுள்ளது என ஜி20 மாநாடு பற்றியும் பேசினார்.

சந்திரயான்-3யின் வெற்றி இந்தியாவை மட்டுமின்றி உலகையே பெருமைப்படுத்தியுள்ளது. தொழில்நுட்பம், அறிவியல், நமது விஞ்ஞானிகளின் திறன் மற்றும் நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் பலம் ஆகியவற்றுடன் இணைந்த நமது நாட்டின் வலிமையின் புதிய வடிவத்தை காட்டுகிறது.

இன்று, நான் மீண்டும் நமது விஞ்ஞானிகளை வாழ்த்த விரும்புகிறேன். சந்திராயன் 3யின் வெற்றி நட்டு மக்களின் உறுதியை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. ஜி20 மாநாட்டால் இந்தியா மீதான எதிர்மறையான எண்ணம் மாறியுள்ளது எனவும் பிரதமர் மோடி தனது துவக்க உரையில் குறிப்பிட்டு பேசினார்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 336

    0

    0