சுற்றுச்சூழலை மாசு ஏற்படுத்தாத வகையில் புதிய வாகனங்கள் : வால்வோ நிறுவனத்தின் புதிய யுக்தி… வாகன உற்பத்தியை துவங்கியது!!
Author: Udayachandran RadhaKrishnan24 June 2022, 1:06 pm
திருப்பதி : மாசு ஏற்படுத்தாத வகையில் வால்வோ நிறுவனத்தின் பசுமை உற்பத்தி பிரிவு துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் இயன்றவரை விரைவில் காற்று, நீர், நிலம் ஆகியவற்றில் ஏற்படும் மாசுவின் அளவை கட்டுப்படுத்த முடிவு செய்து அதற்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக சூரிய மின் உற்பத்தி, காற்றாலை மின் உற்பத்தி ஆகியவற்றை அதிகப்படுத்துவது, பெட்ரோல்-டீசல் ஆகியவற்றில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவது ஆகியவை உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில் உலகின் முன்னணி மோட்டார் உற்பத்தி நிறுவனமான வால்வோ ஆந்திர மாநிலம் நாயுடு பேட்டையில் குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் வாகன உற்பத்தியை துவங்கியுள்ளது.
இன்று துவக்கப்பட்ட அந்த தொழிற்சாலையில் குறைந்த அளவில் புகையை வெளியிடும் வகையிலான லாரி, டிரக்,பேருந்து ஆகியவை உற்பத்தி செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய வால்வோ இந்தியா பிரிவின் நிர்வாக இயக்குனர் கமல் பாலி, மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இங்கு வாகனங்களை தயார் செய்வதற்கு தேவையான திட்டமிடல், டிசைன் செய்தல், உற்பத்தி, விற்பனை ஆகியவை நடைபெற உள்ளன என்று குறிப்பிட்டார்.
பின்னர் பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் குறைந்த அளவில் மாசு ஏற்படுத்தும் வாகன உற்பத்தியை அவர் துவக்கி வைத்தார்.