பிரதமர் மோடிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல்… எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த சபாநாயகர்!!
Author: Udayachandran RadhaKrishnan26 July 2023, 11:57 am
காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவரும், அசாம் முன்னாள் முதலமைச்சர் தருண் கோகோயின் மகனுமான கௌரவ் கோகோய், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.
இதுபோன்று பிஆர்எஸ் சார்பில் எம்பி ராகேஸ்வர ராவ் தாக்கல் செய்தார். மணிப்பூர் கொடூரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச மறுப்பதால், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், பிரதமரை பேச வைக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.
மத்திய பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு, திமுக உள்ளிட்ட I.N.D.I.A. கூட்டணியை சேர்ந்த 26 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாலத் ஜோஷி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும்.
பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல் செய்துள்ளனர். மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார்.
இதனிடையே, மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி 5-ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை அலுவல்படி கேள்வி நேரம் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருவதால், இன்று மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து முடிவடுக்காததால் எதிர்க்கட்சிகள் ஏமாற்றத்தில் உள்ளனர்.