வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கியதில் என்ன தவறு? தவறான செய்தியை பரப்பாதீங்க.. என்எல்சி விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan6 August 2023, 5:22 pm
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அமைப்பதற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு மற்றும் நிரந்தர பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அந்த பட்டியலின்படி மொத்தம் 862 பேருக்கு வேலை வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதில் 28 வட மாநிலத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.நிலம் கொடுத்து வேலை பெற்றவர்களின் பட்டியலில் வட இந்தியர்களின் பெயர்கள் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது.
‘இந்த நிலையில் நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கியதில் வட இந்தியர்களின் பெயர்கள் உள்ளது குறித்து என்.எல்.சி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து என்.எல்.சி நிர்வாகம் கூறியதாவது, என்எல்சி நிறுவனம் இந்திய அளவிலான ஒரு நிறுவனமாக உள்ளது. என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கே பணி வழங்கப்பட்டுள்ளது. வேலை பெற்ற பட்டியலில் உள்ள 28 பேர் ராஜஸ்தானில் நிலம் கொடுத்தவர்கள்.
ராஜஸ்தானில் உள்ள பர்சிங்கார் சுரங்கங்கள், அனல் மின் நிலைய திட்டங்களுக்காக வழங்கப்பட்ட நிலத்தை கருத்தில் கொண்டு வேலை வழங்கப்பட்டது. நிறுவனத்தின் நன்மதிப்பை கெடுக்கும் நோக்கில் தவறான செய்தியை பரப்பி இருக்கக்கூடும். என தெரிவித்துள்ளது.