நள்ளிரவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்து… பலி எண்ணிக்கை 233ஆக உயர்வு ; ஒடிசாவில் பயங்கரம்…!!
Author: Babu Lakshmanan3 June 2023, 8:31 am
ஒடிசாவில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்ட்ரலை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதேபோல, நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரயில்நிலையம் அருகே பெங்களூரூவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரயிலின் சில பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்தன. அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்தது. இதில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ரயில் அதிவேகமாக மோதியது.
இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சில பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்தன. அந்த சமயம், அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு ரயில், தடம்புரண்ட பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரயில்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த கோர விபத்தில் இதுவரையில் 233 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த உடன் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு 7 மணிக்கு விபத்து நடைபெற்ற நிலையில் தொடர்ந்து இன்றும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் விபத்து நடந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
தமிழகம் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானதால், தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் உயிரிழந்துள்ளனாரா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுவரையில், உயிரிழந்த பயணிகளின் விபரத்தை ரயில் அமைச்சகம் வெளியிடவில்லை.
0
1