ஒடிசாவில் மீண்டும் சோகம்.. ரயில் மோதிய விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி ; உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவு

Author: Babu Lakshmanan
8 June 2023, 10:32 am

ஒடிசாவில் ரயில் மோதியதில் ரயில்வே தொழிலாளர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோரில் அடுத்தடுத்து 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 278 பேர் உயிரிழந்தனர். இந்த வடு ஆறுவதற்குள் அடுத்தடுத்து இரு ரயில்கள் விபத்துக்குள்ளாகின. ஆனால், இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

இந்த சூழலில் மேலும் ஒரு ரயில் விபத்து அரங்கேறியிருப்பது நாட்டு மக்களை பெரிதும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. ஜஜ்பூரில் ரயில்வே பணிக்காக ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் சிலர் வேலையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, மழை பெய்ததால், அங்கு இன்ஜின் இல்லாமல் நின்றிருந்த சரக்கு ரயிலின் கீழ் சில தொழிலாளர்கள் ஒதுங்கினர்.

அப்போது,திடீரென வீசிய பலத்த காற்றுக்கு, சரக்கு ரயில் தானாகவே நகர்ந்துள்ளது. இதில் 6 தொழிலாளர்கள் மீது ஏறி இறங்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கஉத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  • Khalid Rahman, filmmaker Ashraf Hamsa arrested for cannabis possession in Kochi கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!