உயிரோடு இருப்பவரை இறந்துவிட்டதாக கூறி நிலத்தை பட்டா போட்ட அதிகாரிகள் : ஆட்சியர் அலுவலக மாடியில் விஷமருந்திய விவசாயி!
Author: Udayachandran RadhaKrishnan25 June 2024, 4:44 pm
தெலுங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் பசராமட்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி நிம்மல நரசிங்கராவு. அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலையில் நிம்மல நரசிங்கராவு இறந்துவிட்டதாக ஆதாரங்களை தயார் செய்த வருவாய்துறை அதிகாரிகள் அவருடைய நிலத்தை இரண்டு பேருக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டனர்.
நான் உயிரோடு இருக்கிறேன் என்று அவர் வருவாய்த்துறை அதிகாரிகள் முன் பலமுறை ஆஜராகி நிரூபித்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
மாவட்ட ஆட்சியரின் குறைதீர்ப்பு முகாமிலும் தான் உயிரோடு இருப்பதாக நேரில் ஆஜராகி அவர் நிரூபித்ததாக தெரியவந்துள்ளது.
ஆனாலும் பலன் கிடைக்கவில்லை. இதனால் வேதனை அடைந்த நரசிங்கராவு மாவட்ட ஆட்சியர் அலுவலக மாடி மீது ஏறி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
அவருடைய தற்கொலை முயற்சியை பார்த்த ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் அளித்தனர்.
விரைந்து வந்த போலீசார் பொதுமக்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரோடு இருப்பவர் இறந்து விட்டதாக ஆதாரங்களை தயார் செய்து அவருக்கு சொந்தமான நிலத்தை வேறு இரண்டு பேருக்கு பட்டா போட்ட வருவாய் துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பட்டுள்ளது.