தேசியக் கொடியை அவமானப்படுத்திய அமேசான் : சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு…
Author: kavin kumar24 January 2022, 8:38 pm
தேசியக் கொடியை அமேசான் நிறுவனம் அவமானப்படுத்தியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் பிரதான தலமாக அமேசான் உள்ளது. இதன் வாயிலாக மக்கள் தினமும் தங்களுக்கு தேவையான பொருட்களை இணையவழியில் ஆர்டர் செய்து பெற்று வருகின்றனர். அவ்வப்போது, அமேசான் நிறுவனம் இந்திய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு தேசியக் கொடி வண்ணத்தில் டோர்மெட் விற்ற விவகாரம் தொடர்பாக, சுஷ்மா சுவராஜிடம் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
தன்னுடைய இணையதளத்தில், இந்திய தேசியக் கொடி வண்ணத்திலான டோர்மெட் மற்றும் காலணிகளை விற்பனைக்கு கொண்டு வந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த இந்தியர்கள், நாட்டு மக்களின் மரியாதைக்குரிய தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் இச்செயல் உள்ளது என்று கடும் கண்டனங்களில் டிவிட்டர் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
இதையடுத்து, அப்போதைய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமேசான் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அந்த செயல் இந்தியாவை அவமதிக்கும் செயல் என்றும், உடனடியாக அப்பொருட்களின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இல்லையெனில் அந்நிறுவன ஊழியர்களுக்கு இந்திய விசா வழங்கப்படாது என்று எச்சரித்தார். இந்நிலையில் குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையை அமேசான் நிறுவனம், தனது கனடா இணையதளத்தில் இருந்து நீக்கியது. தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புதிய புகார் ஒன்றில் அமேசான் ஆன்லைன் மீது எழுந்துள்ளது. அதாவது தேசியக் கொடியை பயன்படுத்தி மாஸ்க், டி.ஷர்ட், கீ செயின்கள் உள்ளிட்டவற்றை அமேசான் விற்பனை செய்வதாகவும், குறிப்பாக ஷூக்களில் தேசியக் கொடி இடம்பெறுவது உள்ளிட்டவற்றால் தேசியக் கொடி அவமானப்படுத்தப்படுவதாகவும், குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதை மையப்படுத்தி ட்விட்டரில், #Amazon_Insults_National_Flag என்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. இதன்கீழ் பதிவிட்டுள்ள ட்விட்டர் பயனாளர்கள், உடனடியாக இதுபோன்ற தேசியக் கொடி சார்ந்த பொருட்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தேசியக் கொடி என்பது முட்டாள்தனமான கிரியேட்டிவிட்டி அல்ல என்று கூறியுள்ள நெட்டிசன்கள், அமேசான் நிறுவனம் எப்போதும் இந்தியர்களின் உணர்வு, கலாச்சாரத்தை புண்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். சில ட்விட்டர் பயனாளர்கள், சட்டப்படி, வர்த்தக காரணங்களுக்காக மூவர்ணக் கொடி பயன்டுத்தக்கூடாது என்பதை சுட்டிக் காட்டி, அமேசான் நிறுவனத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இந்த சர்ச்சை குறித்து அமேசான் நிறுவனம் தரப்பிலிருந்து இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் அளிக்கப்படவில்லை.