வருடத்துக்கு ஒரு முறை மட்டும் திருப்பதிக்கு வாங்க : ஏழுமலையானை தரிசித்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்!!
Author: Udayachandran RadhaKrishnan10 February 2022, 11:35 am
திருப்பதி : அனைவருக்கும் ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்க வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே திருப்பதி மலைக்கு வாருங்கள் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி மலையில் இன்று நடைபெற இருக்கும் தன்னுடைய பேத்தியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு குடும்பத்துடன் திருமலைக்கு வந்திருக்கிறார்.
நேற்று இரவு திருமலைக்கு வந்த அவர் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை தரிசித்தார். மிக முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு வரவேற்பு முறையை தவிர்த்து வரிசையில் சென்று ஏழுமலையானை தரிசித்த அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து வேத பண்டிதர்கள் வெங்கையா நாயுடு மற்றும் அவரது குடும்பத்தாருக்கு வேத ஆசி வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருப்பதி மலையில் இன்று என்னுடைய பேத்தியின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
அதில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் வந்திருக்கிறேன். திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஹிந்து தர்ம பிரச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அனைத்து பக்தர்களும் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். அனைவருக்கும் ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்க வசதியாக திருப்பதி மலைக்கு வருடத்தில் ஒருமுறை மட்டுமே பக்தர்கள் வர வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கும் ஏழுமலையான் தரிசன வாய்ப்பு கிடைக்கும் என்று அப்போது தெரிவித்தார்.