ஒரே ஒரு VIDEO… தெலங்கானா முதலமைச்சருக்கு எதிராக போலீசார் சம்மன் : ஆஜராக உத்தரவு!
Author: Udayachandran RadhaKrishnan29 April 2024, 6:16 pm
ஒரே ஒரு VIDEO… தெலங்கானா முதலமைச்சருக்கு எதிராக போலீசார் சம்மன் : ஆஜராக உத்தரவு!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பான வீடியோ ஒன்றை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
ஆனால் அமித்ஷா தொடர்பான போலி வீடியோவையே ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பகிர்ந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஐடி சட்டத்தின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் படிக்க: 5 நாட்கள் ஓய்வு.. குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்த CM ஸ்டாலின் : போலீசார் கட்டுப்பாட்டில் நட்சத்திர விடுதி!
ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பகிர்ந்திருந்த வீடியோவில், தெலுங்கானாவில் முஸ்லிம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை நீக்குவது தொடர்பாக அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசிப்பதாக காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
இந்த வீடியோ போலியானது என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. தெலுங்கானா மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் இந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது.
இந்த வீடியோ பகிரப்பட்ட பின்னரே, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீடு ரத்தாகிவிடும் என்ற கருத்துகளை காங்கிரஸ் தலைவர்கள் முன்வைத்தனர். இதற்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் பதிலடி தந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இவ்வழக்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் மே 1-ல் விசாரணைக்கு ஆஜராக டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. மே 1-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகும் போது, தமது செல்போனையும் ரேவந்த் ரெட்டி கொண்டு வர வேண்டும் எனவும் டெல்லி போலீஸ் தமது சம்மனில் உத்தரவிட்டுள்ளது.