முன்னாள் முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு.. சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்த வழக்கில் சிஐடி அதிரடி..!!!
Author: Babu Lakshmanan10 May 2022, 4:04 pm
சாலை சீரமைப்பில் முறைகேடு நடந்த வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அமராவதி மாஸ்டர் பிளான் மற்றும் இன்னர் ரிங் ரோடு திட்டங்களில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஆந்திர மாநில சிஐடியிடம் எம்எல்ஏ அல்லா ராமகிருஷ்ண ரெட்டி கடந்த மாதம் 27ம் தேதி புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரங்கள் இருப்பதாகக் கூறி, கடந்த 6ம் தேதி சிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அதாவது, முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, லிங்கமனேனி ரமேஷ், லிங்கமானேனி வெங்கட சூர்யா ராஜசேகர், LEPL புராஜெக்ட்ஸ் மற்றும் ராமகிருஷ்ணா ஹவுசிங் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் அஞ்சனி குமார் ஆகியோர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது எதிர்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளையில், ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்து வரும் சந்திரபாபு நாயுடுவுக்கு கிடைத்த வரவேற்பினை பொறுத்துக் கொள்ள முடியாமல், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, இதுபோன்று பொய்யான வழக்கை பதிவு செய்திருப்பதாக தெலுங்குதேசக் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.