ஏப்.,19ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல்… விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
16 March 2024, 4:27 pm

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- 2024 மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 10.50 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 96.88 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண்கள் 49.72 கோடியும், பெண்கள் 47.15 கோடி பேரும், 48,044 திருநங்கைகளும் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர். மக்களவை தேர்தலில் 1.82 கோடி பேர் முதல்முறை வாக்களிக்க உள்ளனர். 88.40 லட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 19.8 கோடி இளைஞர்கள் வாக்களிக்க உள்ளனர். 800 மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசித்து தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டுள்ளன. 1.50 கோடி தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளில் 11 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலை நடத்தியுள்ளோம். 2024 மக்களவை தேர்தலில் 55 லட்சத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த உள்ளோம். வங்கி வாகனங்கள் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு பணத்தை எடுத்துச் செல்லக் கூடாது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை, வருமான வரித்துறை கண்காணிக்கும்.

வாக்காளர்களுக்க பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள், மது விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தடுக்கப்படும். வேட்பாளர் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சிக்கலாம். போலி செய்திகளை பதிவிடக் கூடாது ; கண்ணியம் காக்க வேண்டும். சாதி, மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையில் விமர்சித்தோ, பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது.

தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மதுஆலைகளில் உற்பத்தி மற்றும் விற்பனை அளவு கண்காணிக்கப்படும். தேர்தலில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்.

தமிழ்நாடு, கர்நாடகா, பீகார், குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 26 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறும். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ம் தேதி நடைபெறும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 27ம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கிறது. வேட்புமனு வாபஸ் மார்ச் 30ம் தேதி செய்யலாம்.

நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டம் – ஏப்.,19, 2வது கட்டம் – ஏப்ரல் 26, 3வது கட்டம் – மே 07, 4வது கட்டம் – மே 13, 5வது கட்டம் – மே 20, 6வது கட்டம் – மே 25, 7வது கட்டம் – ஜுன் 1 ஆகிய தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கு ஏப்ரல் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. என தெரிவித்தார்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!