குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது: நாளை பட்ஜெட் தாக்கல்..!!
Author: Rajesh31 January 2022, 8:49 am
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று கூடுகிறது.
2022ம் ஆண்டின் முதல் கூட்டமான பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கும் இந்த கூட்டத்தில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலையில் தொடங்கும் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்துகிறார். கொரோனா காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், இந்த ஆண்டும் மைய மண்டபத்துடன், இரு அவைகளின் அறையிலும் உறுப்பினர்கள் அமர வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
குடியரசுத் தலைவர் உரையை தொடர்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதைத்தொடர்ந்து 2022-23ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார். இன்று தொடங்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி வருகிற 11ம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 14ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலங்களவை காலை 10 முதல் பிற்பகல் 3 மணி வரையும், மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.