இந்தியாவை சீண்டும் இஸ்லாமிய நாடுகள்… பிரிவினைவாத தலைவருக்கு திடீரென அழைப்பு : கடுப்பான மத்திய அரசு..!!
Author: Babu Lakshmanan17 March 2022, 9:07 pm
பாகிஸ்தானில் நடக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாடுகளுக்கு இடையே அரசியல், பொருளாதாரம், வணிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த கூட்டமைப்பில் 57 நாடுகள் உள்ளன. ஆண்டுதோறும் இந்தக் கூட்டமைப்பு சார்பில் இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 48வது மாநாடு பாகிஸ்தானில் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு காஷ்மீர் பிரிவினைவாத தலைவன் மசரத் ஆலம் பட்டிற்கு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில் கூறியதாவது :- இந்தியாவின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்கு அழிக்கும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகள் மற்றும் அமைப்புகளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு ஊக்கப்படுத்தாது என நம்புவதாக தெரிவித்துள்ளது