தமிழகத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டி : துவக்க விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் அழைப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan19 July 2022, 4:07 pm
சென்னை : செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழக அரசு சார்பில் பிரதமர் மோடியை அமைச்சர் மெய்யநாதன் நேரில் அழைப்பிதழ் வழங்கினார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன.
செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா நிகழ்ச்சிகளை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்ள சென்னை வருமாறு பிரதமர் மோடிக்கு தமிழக அரசு சார்பில் நேரில் சென்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் நேரில் சென்று அழைப்புதழை வழங்கினார் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிஆர் பாலு, கனிமொழி உள்ளிட்டோரும் நேரில் அழைப்பிதழை வழங்கினர். சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், பிரதமா் மோடி பங்கேற்க வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்திருந்தார்.