கடவுள் ராமரிடம் மன்னிப்பு கோருகிறேன்… இது சிலையல்ல, நமது கலாச்சாரம் ; அயோத்தியில் பிரதமர் மோடி பேச்சு..

Author: Babu Lakshmanan
22 January 2024, 3:03 pm

கோவில் கட்டுவதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கு ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. நண்பகல் 12.20 மணியளவில் ராமர் சிலையின் கண்களில் கட்டப்பட்டுள்ள துணியை அகற்றும் பிராண பிரதிஷ்டை நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள பால ராமருக்கு பிரதமர் மோடி விசேஷ பூஜைகளை செய்தார். பின்னர், பாதங்களில் தாமரை மலர்களை தூவியும் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தார்.

இதனையடுத்து, அயோத்தி கோவிலில் குழந்தை ராமர் எழுந்தருளினார். பின்னர், சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ராமரை வழிபட்டார். பின்னர், கோவிலில் இருந்த ஆன்மீகவாதிகளுக்கு பரிசுகளை வழங்கியதுடன், அவர்களிடமும் ஆசியும் பெற்றார்.

தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் பிரதமர் மோடி பேசியதாவது :- நாட்டின் மூலை முடுக்கில் இருந்து வந்துள்ள பக்தர்கள் மற்றும் சாதுக்களை வரவேற்கிறேன். ராமர் கோவிலுக்கான நூற்றாண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது.ராமர் இனி கூடாரத்தில் வசிக்க வேண்டிய நிலை இருக்காது.

நூற்றாண்டு கால தியாகங்கள் மற்றும் காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது ; ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் மக்கள் இந்த நாளை நினைத்து பார்ப்பார்கள். அயோத்தியில் தெய்வீக அனுபவத்தை நான் உணர்கிறேன். கோவில் கட்டுவதற்கு ஏற்பட்ட காலதாமதத்திற்கு ராமரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

ராமரின் ஆசிர்வாதம் நாம் அனைவருக்கும் கிடைத்துள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியா புதிய வரலாறு படைத்து வருகிறது. ராமரின் ஆசிர்வாதத்தால் தனுஷ் கோடி அரிச்சல் முனையில் நேற்று வழிபட்டேன். ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் பிரார்த்தனையில் ஈடுபட்டேன். ஒட்டுமொத்த நாடும் ராமர் கோவில் விழாவை தீபாவளி பண்டிகை போல கொண்டாடுகின்றனர்.

கடந்த 11 நாட்களில் பல மாநிலங்களில் பல்வேறு மொழிகளில் ராமாயணத்தை கேட்டேன். ராமர் கோவில் இந்தியாவின் அமைதி, ஒற்றுமைக்கான அடையாளம். ராம் என்பது யாரையும் எரிக்கும் நெருப்பல ; சக்தியை கொடுக்கும் ஆற்றல். ராமேஸ்வரம் முதல் சரயு நதிக்கரை வரை ராம நாமமே ஒலிக்கிறது. அயோத்தியில் நிறுவப்பட்டது ராமரின் சிலை மட்டுமல்ல, நாட்டின் கலாச்சாரமும் தான்.

ஸ்ரீராமர் பிரச்சனைக்குரியவர் அல்ல, பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர். இக்காலகட்டம் நாட்டின் வளர்ச்சிக்கான அமிர்த காலம். நாட்டு மக்களின் மனசாட்சியாக ராமர் திகழ்வார். மக்கள் அனைவரும் வீடுகளில் ஸ்ரீராம தீபத்தை ஏற்ற வேண்டும், எனக் கூறினார்.

  • Director Rv Udayakumar Talked About Vijay Politics Entryஇது மட்டும் இல்லைனா விஜய் கட்சியே ஆரம்பித்திருக்க முடியாது : புயலை கிளப்பிய இயக்குநர்!