வாழ்த்து மழையில் பிரக்ஞானந்தா… பரிசுத்தொகை இத்தனையா? அடுத்தடுத்து காத்திருக்கும் பரிசுகள்!!!
Author: Udayachandran RadhaKrishnan24 August 2023, 9:47 pm
டை பிரேக்கர் சுற்றின் முதல் போட்டி விறுவிறுப்பாக சென்ற நிலையில், 47 வது காய் நகர்தலுடன் மேக்னஸ் கார்ல்சன் முதல் டை பிரேக்கர் சுற்றில் வெற்றி பெற்றார். பிறகு டை பிரேக்கர் சுற்றின் இரண்டாவது ஆட்டம் தொடங்கியது. இதில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் களமிறங்கினார். இறுதியில் இந்த இரண்டாவது சுற்று டிராவில் முடிந்தது.
இதனால் உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் மேக்னஸ் கார்ல்சன், 2.5 – 1.5 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று, 6 வது முறையாக உலகக்கோப்பை செஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த இறுதி போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த பதிவில், “FIDE உலகக் கோப்பையில் பிரக்ஞானந்தாவின் சிறப்பான ஆட்டத்திற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்! அவர் தனது விதிவிலக்கான திறமைகளை வெளிப்படுத்தினார் மற்றும் இறுதிப் போட்டியில் வல்லமைமிக்க மேக்னஸ் கார்ல்சனுக்கு கடுமையான சண்டையை வழங்கினார். இது சிறிய சாதனையல்ல. அவரது வரவிருக்கும் போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.” என்று கூறியுள்ளார்.
இதே போல, பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், பிரக்ஞானந்தாவின் சாதனையை கண்டு ஒட்டுமொத்த நாடே பெருமை கொள்கிறது தோல்வியடைந்த போதிலும் உங்களின் சாதனை 140 கோடி இந்தியர்களின் கனவை பிரதிபலிப்பதாக உள்ளது. உங்களது வெள்ளிப் பதக்கம் வருங்கால தலைமுறைக்கு ஊக்கம் தரும் என பதிவிட்டுள்ளார்.
செஸ் உலகக் கோப்பை தொடரில் முதல் இடம் பிடித்த கார்ல்சனுக்கு ₹91 லட்சமும், 2ம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு ₹67 லட்சமும் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.