மம்தாவுடனான ஒப்பந்தத்தை முறிக்கும் பிரசாந்த் கிஷோர்..? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலால் எழுந்த சண்டையால் அதிரடி முடிவு…!!!
Author: Babu Lakshmanan9 February 2022, 4:59 pm
மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியுடன் ஏற்பட்ட மோதலால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடனான ஒப்பந்தத்தை அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் முறித்துக் கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அரசியல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் ஒப்பந்தம் செய்திருந்தார். அவரது ஆலோசனைகளின் மூலம் மம்தா பானர்ஜி 3வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை பெற்றார். அவர் வெற்றி பெற பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் வகுத்துக் கொடுத்த திட்டங்களே முக்கிய காரணமாகும்.
மத்தியில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை எனக் கூறி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். அதோடு, இன்னும் 10 ஆண்டுகளுக்கு பாஜகவை வீழ்த்த முடியாது என்று எதிர்கட்சிகளிடையே குண்டை தூக்கிப் போட்டார்.
இது ஒருபக்கம் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் தேர்வு விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கும், பிரசாந்த் கிஷோருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து மம்தா பானர்ஜி எந்த கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.